ஜெயலலிதா வழியை பின்பற்றும் கவிதா; தெலுங்கானா மக்களின் அம்மா என அறிவிப்பு
28 சித்திரை 2026 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 170
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை பின்பற்றி, தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் தான் ஒரு, 'அம்மா' போல இருப்பேன் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., உள்ளது. தேசிய அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசைக்காக, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என இருந்த கட்சியின் பெயரை, பாரத் ராஷ்ட்ர சமிதி என, அவர் மாற்றினார்.
தெலுங்கானாவில், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சந்திரசேகர ராவ், 2023 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2024 லோக்சபா தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார். இதனால், இரு ஆண்டுகளாக அவர் பொது வெளியில் தலைகாட்டவில்லை.
இந்த சூழலில், தன் சகோதரரும், பி.ஆர்.எஸ்., செயல் தலைவருமான கே.ராமா ராவ், உறவினரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் ராவ் ஆகியோரை, சந்திரசேகர ராவின் மகள் கவிதா தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, கட்சியில் இருந்து கவிதா நீக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த அவர், பி.ஆர்.எஸ்., தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ்., கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, 10 மாதங்களுக்கு பின், தெலுங்கானா அரசியலில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் கவிதா. தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு போட்டியாக, தெலுங்கானா ராஷ்ட்ர சேனா என்ற புதுக்கட்சியை அவர் துவங்கினார். தேசிய அரசியல் ஆசைக்காக சந்திரசேகர ராவ் கைவிட்ட டி.ஆர்.எஸ்., என்ற பெயரையே கவிதா கையில் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன் சகோதரர் கே.ராமா ராவ், உறவினர் ஹரிஷ் ராவ் ஆகியோரை மட்டும் விமர்சித்து வந்த கவிதா, முதன்முறையாக தன் தந்தை சந்திரசேகர ராவை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். டி.ஆர்.எஸ்., கட்சி துவக்க விழாவில், கவிதா பேசுகையில், ''என் தந்தை சந்திரசேகர ராவ் தற்போது, 'ரோபோட்' போல மாறிவிட்டார். மக்களின் துயரங்களை கண்டு அவர் கலங்குவதில்லை. அவர், கட்சியில் உள்ள சில ஓநாய்கள் மற்றும் நரிகளின் பிடியில் சிக்கி உள்ளார்,'' என, குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய கவிதா, தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை பின்பற்றி, தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் தான் ஒரு, 'அம்மா' போல இருப்பேன் என, உணர்ச்சிவசப்பட்டார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றை தன் முக்கிய முழக்கங்களாக அவர் முன்வைத்துள்ளார்.
தெலுங்கானா மண்ணில் இதுவரை, 14 கட்சிகள், 'தெலுங்கானா' என்ற பெயரில் தொடங்கப்பட்டு மறைந்துள்ளன. கவிதாவின் இந்த, 15-வது முயற்சி வெற்றி பெறுமா அல்லது பி.ஆர்.எஸ்., கட்சியின் ஓட்டுகளை பிரித்து காங்கிரசுக்கு மறைமுகமாக உதவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசியல் பின்னணியும், சர்ச்சையும்
கடந்த 2014- லோக்சபா தேர்தலில், தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி.,யாக அரசியல் பயணத்தை தொடங்கிய கவிதா, 2019ல், அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். அதன்பின், அவர் சட்ட மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டில்லி மதுபான ஊழல் வழக்கில் அவர் கைதானார். இது, 2024 லோக்சபா தேர்தலில் பி.ஆர்.எஸ்., கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சந்திரசேகர ராவ் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட விரிசல் தற்போது புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan