Paristamil Navigation Paristamil advert login

அரசு மருத்துவமனைகளில் விரைவில் முன்பதிவு திட்டம்: உருவாகிறது பிரத்யேக செயலி

அரசு மருத்துவமனைகளில் விரைவில் முன்பதிவு திட்டம்: உருவாகிறது பிரத்யேக செயலி

12 ஆனி 2026 வெள்ளி 10:21 | பார்வைகள் : 1179


அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, பிரத்யேக செயலி உருவாக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில், மருத்துவக் கல்லுாரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

பின், அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி:

அனைத்து மருத்துவமனைகளிலும், நோயாளிகள் அனுபவ கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி ஒவ்வொரு வாரமும் கூடி, நோயாளிகளுக்கான வசதிகள், மருத்துவமனை சுகாதாரம் குறித்து ஆலோசித்து, கண்காணிப்பு பணியிலும் ஈடுபடும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, திங்கள், செவ்வாய் கிழமைகளில், 3,000 பேர் வரை வருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

எனவே, தனியார் மருத்துவமனைகள் போல முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, தனியார் வாயிலாக பிரத்யேகமாக மொபைல் போன் செயலி உருவாக்கப்படும்.

அதில், ஆதார் பயன்படுத்தி, காலை 8:00 முதல் 9:00 மணி வரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இது, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு மருத்துவ மனைகளில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில், நிபுணத்துவ டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். பெரியளவில் மின் தடை இல்லை. மின் தடையால் நோயாளிகளுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின் தடை போன்ற பிரச்னைகளை கையாள, மக்கள் நல்வாழ்வு துறை, பொதுப்பணித் துறை, மின் வாரியம் ஆகிய அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.