அந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்; ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் முரண்டு
28 சித்திரை 2026 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 131
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரவிந்த் கெஜ்ரிவால், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரை, கடந்த பிப்ரவரியில் டில்லி விசாரணை நீதிமன்றம் விடுவித்திருந்தது.
இதை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா தலைமையிலான அமர்வு விசாரிக்க பட்டியலிடப்பட்டது.
ஆனால், நீதிபதி ஸ்வர்ண காந்தா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதாலும் அவரது மகன்கள் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக செயல்படுவதாலும், இந்த வழக்கை அவர் விசாரிக்கக் கூடாது என டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
அவர் முன்வைக்கும் சந்தேகங்கள் ஏற்புடையதாக இல்லை எனக் கூறிய ஸ்வர்ண காந்தா சர்மா, வழக்கு விசாரணையில் இருந்து விலக மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக நீதிபதி ஸ்வர்ண காந்தாவுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என் வழக்கை வாதிடுவதற்காக உங்கள் முன் நான் ஆஜரான போது, என் இதயத்தில் எளிமையான கேள்வி ஒன்று எழுந்தது. அது, 'எனக்கு நீதி கிடைக்குமா?' என்பதுதான். இந்த கேள்வி என் மனசாட்சியில் இன்னும் ஆழமாகவும், தீவிரமாகவும் உருவெடுத்துள்ளது. உங்கள் அமர்வில் என் வழக்கு பாரபட்ச முறையில் நடக்கிறது. இந்த சூழலில் இந்த வழக்கில் பங்கேற்பது, என் ஆன்மாவிற்கு நான் செய்யும் துரோகம். இது கண்ணியமற்ற செயலும் கூட.
மஹாத்மா காந்தியின் சத்தியாகிரக பாதையை பின்பற்றி, இந்த நீதிமன்ற புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளேன். இது, சட்ட மறுப்பு மட்டுமல்ல; தார்மீக போராட்டமும் கூட. 'நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவது போல் தோற்றமளிக்க வேண்டும்' என்ற சட்டவிதியை இந்த விசாரணை பூர்த்தி செய்யவில்லை. நீதிமன்றங்கள் அதிகார அத்துமீறலுக்கு எதிரான கடைசி புகலிடம் என, மக்கள் நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கையை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. தவறான நடைமுறை என நான் கருதும் விஷயத்தில் பங்கேற்பது என் நம்பிக்கையை சிதைத்துவிடும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பதாலும், உங்கள் பிள்ளைகள் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதாலும், இந்த வழக்கில் பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பு கிடைக்கும் என்ற என் நம்பிக்கை சிதைந்துவிட்டது.
எனவே, இந்த வழக்கில் நேரடியாகவோ, வழக்கறிஞர் வாயிலாகவோ இனி ஆஜராக மாட்டேன். நீதித் துறையின் மீதான முழு மரியாதையுடனும், உரிய பண்புடனும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதன் வாயிலாக ஏற்படும் கைது அல்லது பிடிவாரண்ட் உள்ளிட்ட சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியிட்டுள்ள வீடியோவில், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா இந்த வழக்கில் இருந்து விலகக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan