மக்கள் தான் என் குடும்பம்; மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி உருக்கம்
28 சித்திரை 2026 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 161
மேற்குவங்கத்தில் நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்; மக்கள் தான் என் குடும்பம் என இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் பராக்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர போருக்கு வலிமை அளித்த பாரக்பூர் தான் மேற்குவங்க மாற்றத்துக்கான பாதையை அமைக்கிறது. அனைவரது மத்தியிலும் வாழ்வதில் தான் நான் மகிழ்ச்சியை காண்கிறேன்; நீங்களே எனது குடும்பம்.
மேற்குவங்கத்துக்கு சேவையாற்றுவதும், காப்பாற்றுவதும் வெறும் விதியல்ல, எனது கடமை. மேற்குவங்கத்தின் ஆளுமைகளிடம் இருந்து உத்வேகம், மக்களின் அன்பை பெற்று உள்ளேன். மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரே வார்த்தை, மாற்றம் தேவை, பாஜ அரசு வேண்டும் என்பது தான்.
நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். இதுவே மேற்குவங்கத்தில் கடைசி பிரசார நிகழ்வு. மே 4ம் தேதிக்கு பிறகு பாஜவின் பதவியேற்பு விழாவிற்கு திரும்புவேன். பாஜ ஆட்சி அமைக்கும்.
பாஜவின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கிறேன். அது எனது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது. நான் ஹெலிபேடில் இருந்து இங்கு வந்துகொண்டிருந்தேன். இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள பாதை. இருபுறமும் மிகப்பெரிய கூட்டம் இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து என்னை வாழ்த்துவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மாநிலத்தில் தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்துள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் அரசிடம் தெளிவான செயல் திட்டம் இல்லை. இரட்டை இன்ஜின் அரசு தேவை. மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியமாகும். திரிணமுல் காங்கிரஸின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி அளித்த ஐந்து உத்தரவாதங்கள் பின்வருமாறு:
* காலந்தவறாத அரசு வேலை ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* தற்போதுள்ள அனைத்து அரசு வேலை காலிப் பணியிடங்களும் தாமதமின்றி நிரப்பப்படும்
* திறமைக்கு ஏற்ற வேலை உருவாக்கி தரப்படும்.
* மேற்கு வங்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின் கீழ் பலன்களைப் பெறுவார்கள்.
* ஜி-ராம்-ஜி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் படி கிராமங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan