Paristamil Navigation Paristamil advert login

டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா?

டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா?

17 பங்குனி 2026 செவ்வாய் 15:57 | பார்வைகள் : 279


தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. த்ரில்லர், பேய் படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் கைதேர்ந்தவராக உள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்த த்ரில்லர் படமான டிமான்டி காலனி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

2015ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகியது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே வெளியாகிய இந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை முடிக்கும்போது இதன் 3ம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிந்திருக்கும்.

இந்த நிலையில், இந்த படத்தின் 3ம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. டிமான்டி காலனி 3ம் பாகத்தில் பிரபல நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

டிமான்டி காலனி படத்தின் 2ம் பாகம் முடியும்போது, ஒரு நூலகர் கதாபாத்திரத்துடன் படம் நிறைவடைந்திருக்கும். 3ம் பாகத்தின் வில்லன் கதாபாத்திரமான அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்? என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

3ம் பாகத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் குரு சோமசுந்தரம் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதன் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ரத்தம் தெறிக்க 2ம் பாகத்தின் தொடர்ச்சிக்கான காட்சியில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

இந்த 3ம் பாகத்தில் நடிகர் அருள்நிதியுடன் பிரியா பவானிசங்கர், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், நடிகை அர்ச்சனா, நடிகர் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் பி தயாரிக்கிறது. முதல் 2 பாகங்களைப் போலவே இந்த 3ம் பாகத்தையும் விறுவிறுப்பாக எடுத்து முடிக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். கோடை விடுமுறையாக இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரண்ய காண்டம் படம் மூலமாக நடிகராக அறிமுகமான குரு சோமசுந்தரம் ஜிகர்தண்டா படத்தில் மிகவும் பிரபலமானார். ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மிகவும் யதார்த்தமான அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத்தில் மின்னல் முரளி படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.