Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்பெக்டர்கள் உத்தரவின்றி லத்தியை எடுக்க போலீசாருக்கு தடை

இன்ஸ்பெக்டர்கள் உத்தரவின்றி லத்தியை எடுக்க போலீசாருக்கு தடை

8 சித்திரை 2026 புதன் 12:58 | பார்வைகள் : 294


தந்தை, மகனை அடித்து கொலை செய்த, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், காவல் நிலையங்களில் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்களை அகற்றும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை அடித்தே கொலை செய்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது.

இத்தீர்ப்பு, காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல்வேறு சம்பவங்களில் காவல் துறையினர் கொல்லப்பட்ட வழக்குகளில், இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்பட்டனவா என, கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக, மாநிலம் முழுதும் காவல் நிலையங்களில், விசாரணையின்போது அடிக்க பயன்படுத்தும் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்களை, அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியுள்ளதாவது:

சாத்தான்குளம் தீர்ப்பை சுட்டிக்காட்டி, எங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். ஒருவரை அடித்து தான் உண்மையை வரவழைக்க முடியும் என, நம்பும் போலீஸ்காரர்கள், இப்பணிக்கே தகுதியற்றவர்கள்.

அறிவியல் ரீதியான புலனாய்வு விசாரணை முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவரை அடிப்பதற்கு போலீசாருக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை.

இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கண்காணிப்பு இன்றி, காவல் நிலையங்களில் யாரையும் விசாரிக்க கூடாது.  இன்ஸ்பெக்டர்களின் உத்தரவு இன்றி, போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.