Paristamil Navigation Paristamil advert login

புலியை இப்போது தான் பார்க்கின்றனர்: காங்-., மீது சீமான் பாய்ச்சல்

புலியை இப்போது தான் பார்க்கின்றனர்: காங்-., மீது சீமான் பாய்ச்சல்

8 சித்திரை 2026 புதன் 07:38 | பார்வைகள் : 182


சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாங்கள் எத்தனை முறை தோல்வியை கண்டாலும், போராட்டத்தை கைவிடவில்லை. மூன்று, நான்கு சீட்டுக்காக முழங்காலிட்டு யாரிடமும் காத்திருக்கவில்லை. அரசியல் இங்கே வியாபாரமாகி விட்டது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் நிலைப்பாட்டை எதிர்த்து கட்சி தொடங்கி விட்டு, பின், அவர்களுடனே கூட்டணி வைத்து, அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், லஞ்சமும் ஊழலும் திளைக்கும் என்கிறார்கள். அ.தி.மு.க., வந்தால் மட்டும், நேர்மை மட்டுமே இருக்குமா; மீண்டும், இருவரும் சேர்ந்து கொள்ளையடிப்பர்.

காரைக்குடி தொகுதியில், நான் போட்டியிடுவது பற்றி, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

அவர்கள் இதுவரை நாய், நரி, பூனையை பார்த்திருப்பர். புலியை, இப்போது தான் பார்க்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு, என்னை பார்த்து நடுக்கமும் பயமும் ஏற்பட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் என்னவென்றே எனக்கு தெரியாது. அடக்குமுறைகளுக்கு அஞ்சக்கூடாது. அனுமதி தராவிட்டாலும் மீறி வந்து, பிரசாரம் செய்ய வேண்டும். அடக்குமுறை, ஒடுக்குமுறையை மீறி நிற்க வேண்டும். விஜயின் அரசியல் என்னை பாதிக்காது.

நான் திரையில் இருந்து வந்து, கட்சி தொடங்கி ரசிகர்களை பார்க்கவில்லை. சிறையில் இருந்து வந்து கட்சி தொடங்கி, மக்களை சந்திக்கிறேன்.

எனக்கு ஓட்டு போடுபவர்கள், காற்றில் பறக்கும் புதர்கள் அல்ல; புயலே வந்தாலும் வீரியத்துடன் இருக்கும் நெல்மணிகள். இவ்வாறு அவர் பேசினார்.