சீட் தரவில்லை என்பதால் குள்ளநரி வேலையா? பதவி பறிபோகும் என்கிறது தி.மு.க., தலைமை
31 பங்குனி 2026 செவ்வாய் 08:22 | பார்வைகள் : 272
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தியில், சென்னையில் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ., போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், குள்ளநரித்தன வேலையில் ஈடுபட்டால் பதவி பறிபோகும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது. அதேநேரம், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, தி.நகர் ஜெ.கருணாநிதி, எழும்பூர் பரந்தாமன், வில்லிவாக்கம் வெற்றி அழகன், திருவொற்றியூர் கே.பி.பி.சங்கர் உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., தலைமை, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.
இந்நிலையில், உழைப்புக்கு மரியாதை இல்லை எனக்கூறி, தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி, தன் பகுதி செயலர் பதவியை ராஜினமா செய்தார். எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள், அறிவாலயம், டி.ஆர்.பாலு வீட்டையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பல அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளடி வேலையில் ஈடுபடுவதாகவும் தலைமைக்கு புகார்கள் சென்றன. 'அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவில்லை எனில், கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும்' என, 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அதேநேரம் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் தி.மு.க., 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமைச்சர்களாக உள்ள கயல்விழி, மனோ தங்கராஜ், காந்தி மற்றும் சென்னையில் உள்ள பல எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பதவியை ராஜினாமா செய்வவோடு, போராட்டங்களையும் நடத்த துவங்கிவிட்டனர்.
இந்த விபரத்தை அறிந்த ஸ்டாலின், 'பல கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது, தொகுதியில் உள்ள நிர்வாகிகளின் பொறுப்பு.
'இதை செய்யாமல் அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டே இருந்தால், பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன். சம்பந்தப்பட்ட நபர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும்; கட்சியில் இருந்தும் நீக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.
அதன் அடிப்படையில், சென்னை மண்டல தி.மு.க., பொறுப்பாளரான எம்.பி., ஆ.ராஜா, நேற்று, எஸ்.ஆர்.ராஜாவை சந்தித்து சமாதானப்படுத்தினார். பின், அவருடன் சென்று, தாம்பரம் வேட்பாளர் கிருத்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தி.நகர் கருணாநிதியையும் சந்தித்து, சமாதானம் செய்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan