Paristamil Navigation Paristamil advert login

எந்த தியாகமும் செய்ய தயார்: பழனிசாமி அறிவிப்பு

எந்த தியாகமும் செய்ய தயார்: பழனிசாமி அறிவிப்பு

15 வைகாசி 2026 வெள்ளி 14:24 | பார்வைகள் : 1199


ஆறு அமைச்சர்கள், 10 வாரிய தலைவர் பதவிகளுக்காக, சில முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க.,வுக்கு  துரோகம் செய்வதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், வெற்றி பெற்ற சில முன்னாள் அமைச்சர்கள், ஆளும் கட்சியுடன் இணைந்தால், ஆறு அமைச்சர்கள், 10 வாரிய தலைவர் பதவிகள் கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவிற்கு மாறாக, அரசின், நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். இது, அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் செய்த மாபெரும் துரோகம்.

அப்படி கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், என் மீது பல்வேறு அவதுாறுகளை சுமத்தி வருகின்றனர். இது, வேதனை அளிக்கிறது. அமைச்சர், வாரிய பதவிகளுக்காக, சுயநலத்துடன் செயல்படும், ஒரு சில முன்னாள் அமைச்சர்களிடம், அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நுாற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க., மக்களுக்காக இயங்கும் என சூளுரைத்த, ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க, எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

அ.தி.மு.க., இப்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு, மீண்டும் ஆட்சி அமைக்க அரும் பணியாற்றுவோம். கட்சி மேலும் வலுப்பெற, அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.