Paristamil Navigation Paristamil advert login

23 நாடுகளில் பரவியுள்ளது புதிய கொவிட் திரிபு ‘சிக்காடா’ வைரஸ்

23 நாடுகளில் பரவியுள்ளது புதிய கொவிட் திரிபு ‘சிக்காடா’ வைரஸ்

30 பங்குனி 2026 திங்கள் 13:08 | பார்வைகள் : 265


கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரிபு அதன் அசாதாரணமான மரபணு மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீண்ட காலத்திற்கு ஒருமுறை நிலத்திலிருந்து வெளியே வரும் 'சிக்காடா' பூச்சிகளைப் போலவே, இந்த வைரஸும் நீண்ட காலம் கண்டறியப்படாமல் மறைந்திருந்து, திடீரென மீண்டும் வெளிப்பட்டதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் இதனுடன் தொடர்புடைய முதல் பாதிப்பு 2025 ஜூன் மாதம் பதிவாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை, இந்தத் திரிபு 70 முதல் 75 வரையிலான மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மனித உடலுக்குள் வைரஸ் ஊடுருவ உதவும் 'ஸ்பைக் புரோட்டீன்' பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'JN.1' திரிபிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகக் கருதப்படுகிறது.

இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, 'சிக்காடா' திரிபு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஓமிக்ரான் வகையைப் போன்றே இதுவும் மென்மையான அறிகுறிகளையே கொண்டுள்ளது:

இருமல் மற்றும் தொண்டை வலி, சோர்வு மற்றும் உடல் வலி, மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், மிதமான காய்ச்சல், அரிதாக வாசனை மற்றும் சுவை இழப்பு, இரவு நேரங்களில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளையே கொண்டுள்ளது:

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியைச் சற்றே ஏமாற்றும் திறன் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள தடுப்பூசிகள் தீவிரமான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர்.