Paristamil Navigation Paristamil advert login

லோக்சபாவில் ரகளை செய்த தமிழக எம்.பி.க்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட்!

லோக்சபாவில் ரகளை செய்த  தமிழக எம்.பி.க்கள் உட்பட  8 பேர் சஸ்பெண்ட்!

4 மாசி 2026 புதன் 05:39 | பார்வைகள் : 706


ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று சபையில் மீண்டும் பேச முயன்றார். அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே எழுதிய, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற புத்தகத்திற்கு ராணுவ அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் இன்னும் வெளியாகவில்லை.

அந்த புத்தகத்தில், 2020ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், சீன ராணுவம் அத்துமீறி நம் நாட்டுக்குள் நுழைந்தது போன்ற தகவல்களை நரவனே விவரித்துள்ளதாக, 'கேரவன்' என்ற ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லோக்சபாவில் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாசிக்க முற்பட்டார்.

அமளி

இதனால், பா.ஜ., - காங்கிரஸ் எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, 'பத்திரிகை, ஊடகங்களில் வரும் செய்திகளை கொண்டு வந்து சபையில் பேசக்கூடாது' என மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு, ராகுல் மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி அதிகமாகி லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தால் லோக்சபாவில் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. நேற்று காலை சபை கூடியதும், இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி குறைப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால், கடும் அமளி நிலவியதை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பகல் 12:00 மணிக்கு கூடியது. அப்போதும் அமளி நிலவியதால், இரண்டாவது முறையாக சபை ஒத்திவைக்கப்பட்டது.

முக்கியத்துவம்

பின்னர், மீண்டும் பிற்பகல் 2:00 மணிக்கு கூடியபோது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சபாநாயகர் கேட்ட ஆதார குறிப்புகளை சபையில் சமர்ப்பித்து இருப்பதாக கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய ராகுல், “ஜனாதிபதி உரையில் நம் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணுவது அவசியமானது.

லோக்சபாவில் நான் சமர்ப்பித்த ஆதாரக்குறிப்புகளில் ராணுவ தளபதியின் தொலைபேசி அழைப்பு மிக முக்கியமான பகுதி. அவரது அழைப்புக்கு நம் பிரதமர் எப்படி எதிர்வினையாற்றினார் என்பது பற்றியது,” என்றதும் பா.ஜ., எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர்.

அப்போது இடைமறித்த பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “குறிப்பிட்ட விவகாரம் குறித்து பேசக்கூடாது என, சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். அந்த விவகாரத்தை மீண்டும் மறைமுகமாக பேசவோ, குறிப்பிடவோ முடியாது. ஜனாதிபதி உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் தாராளமாக பேசலாம். அதை கேட்பதற்கு நாங்களும் தயார்,” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் அமளி ஏற்பட்டது. கூச்சலுக்கு நடுவே பேசிய ராகுல், “புத்தகம் பற்றி வாய்திறக்கக் கூடாது என்றால், அதற்கு நான் உடன்படுகிறேன். அதேசமயம் குறைந்தபட்சம் நான் பேசுவதற்கு அனுமதி தருவது தான் நியாயமாக இருக்கும்,” என்றார்.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னடி, “ஜனாதிபதி உரையின் மீது பேசுவதற்கு தான் உங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது,” என்றார்.

இதனால், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். கோபத்தில் கொந்தளித்த ராகுல், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் லோக்சபாவில் பேச எனக்கு உரிமை இருக்கிறது,” எனக் கூற, “சபாநாயகர் உத்தரவை மீற முடியாது. நீங்கள் பேசவில்லை என்றால், வேறு நபரை அழைக்க நேரிடும்,” என கிருஷ்ண பிரசாத் தென்னடி பதில் அளித்தார்.

எனினும், மீண்டும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த லடாக் விவகாரம் குறித்து ராகுல் பேச முயன்றதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, மற்ற எம்.பி.,க்கள் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. அமளி அதிகமானதால் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 3:00 மணிக்கு கூடியது.

அப்போதும் கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா செயலர் மற்றும் சபாநாயகர் இருக்கையின் மீது காகிதங்களை கிழித்தெறிந்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

சஸ்பெண்ட்

இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, காங்கிரசை சேர்ந்த தமிழக எம்.பி., மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், குர்ஜீத் சிங், கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, டீயன் குரியகோஸ் ஆகிய எட்டு எம்.பி.,க்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், சபை நடவடிக்கை முடங்கியதால் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தியா - அமெரிக்கா இடையே இறுதியாகவுள்ள வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, பார்லி.,யின் நுழைவு வாயிலில் அமர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பிரியங்கா, “எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கேலிக்குரியது,” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் நடத்தை ஒழுங்கீனமாக இருந்தது,” என்றார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்