திருச்சி கோர்ட்டில் 12-ந் தேதிக்குள் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?
3 மாசி 2026 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 712
திருச்சி,கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஏற்கனவே கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்கள் என 400-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இதேபோல சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திலும் நவீன 3டி லேசர் ஸ்கேனர் கருவியின் உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கரூர் கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கானது திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கரூர் மாவட்ட கலெக்டர், த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் த.வெ.க. தலைவர் விஜய் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு, அதன்படி டெல்லியில் ஆஜரான விஜய்யிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஜய்யிடம் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வருகிற 12-ந் தேதிக்குள் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளை தற்போது சி.பி.ஐ. தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan