Paristamil Navigation Paristamil advert login

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு! கோரியது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு! கோரியது.

3 மாசி 2026 செவ்வாய் 12:58 | பார்வைகள் : 779


சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றாததால் தாக்கலான  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் செயல் அலுவலர் நேற்று நேரில் ஆஜரான நிலையில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்' என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது . மேலும், 'கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை' என்றும், அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராம ரவிகுமார், பரமசிவம், அரசுபாண்டி ஆகியோர் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு அடிப்படையில், டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார்.

உத்தரவு

ஆனால், தீபம் ஏற்றப் படவில்லை. இதையடுத்து, 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிகுமார் மனு தாக்கல் செய்தார்.

இதை அவசர வழக்காக, டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்து சென்று தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க,  உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தர விடுகிறேன்' என்றார்.

இதை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

அனுமதிக்கவில்லை

டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தரப்பில்  தீபத்துாணில் தீபம் ஏற்ற, இந்நீதிமன்றம் மீண்டும் அனுமதித்தது.

ஆனால், மீண்டும் இந்நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பதிலாக, மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றத்தில் இருந்துள்ளார். மனுதாரர் தரப்பை மலையேற அனுமதிக்கவில்லை. இனிகோ திவ்யன் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக, சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல்களை வெளியிடும் திட்டம் எதுவும் உள்ளதா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., - டிச., 17ல் காணொளி மூலம் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

டிச., 17ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இவ்வழக்கை மீண்டும் விசாரித்தார். தலைமை செயலர் முருகானந்தம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொளியில் ஆஜராகினர்.

கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு, தலைமை செயலர் ஆக்கப்பூர்வ நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்பில் தொடர்புடைய அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப் படவில்லை. இவ்வாறு உத்தரவிட்டார்.

சேகர்பாபு கூறினாரா?

ஜன., 9ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்த போது, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆஜராகினர். தலைமை செயலர் தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி, கோவில் தரப்பை நோக்கி, 'நீங்களாக செயல்பட்டீர்களா அல்லது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதுவும் கூறினாரா? தர்கா சந்தனக்கூடு விழாவின் போது, கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் கொடியேற்ற அனுமதித்திருக்கக்கூடாது.

தீபத்துாண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்கவில்லை. அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டிய சூழல் வரும்' என்றார். அரசு தரப்பு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'தகுந்த காரணம் தெரிவிக்காத பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்களுக்கு எதிராக பிப்., 2ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்' என, உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்த போது, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆஜராகினர்.

அரசுபாண்டி தாக்கல் செய்த மனு:

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கடமை தவறிவிட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.

முடித்து வைக்க தயார்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிரி: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்ற உள்நோக்கம் அரசுக்கு இல்லை. ஹிந்து, முஸ்லிம்களுக்கு இடையே பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர்கள் தீபம் ஏற்ற வந்தபோது அதிகம் பேர் கூடினர். சிலர் பிரச்னையில் ஈடுபட்டனர்.  உளவுத்துறை தகவல் அடிப்படையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தீபம் ஏற்ற முடியவில்லை.

நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம். இச்சூழலை விளக்கி, வருத்தம் தெரிவித்து, கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதி, 'தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, இரு நீதிபதிகள் அமர்வு, ஜன., 6ல் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதா? அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவ்வழக்கை முடித்து வைக்க தயார்' என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், 'உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்ய, 90 நாட்கள் அவகாசம் உள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. வருத்தம் தெரிவித்ததை பதிவு செய்து கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.


இதுபோன்ற வழக்குகளில் ஆஜராக வரும்போது, நீதிமன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 'அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் என்ன செய்துவிடும்' என, நினைப்பது போல் தோன்றுகிறது.

இவ்வாறு கூறிய நீதிபதி, அதிகாரிகளுடன் வந்திருந்த போலீஸ் உதவி கமிஷனர் சத்தியபிரியாவிடம், 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என, கேள்வி எழுப்பினார்.

மூத்த வழக்கறிஞர் கிரி, 'அவ்வாறு நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்' என்றார்.

 

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது மற்றும் அவர்கள் அடுத்தகட்ட விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

கலெக்டர் பிரவீன்குமார் மார்ச் 2ல் ஆஜராக வேண்டும். ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதத்தை, இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோருவது தேவையற்றது. இவ்வாறு உத்தரவிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்