Paristamil Navigation Paristamil advert login

தேசியவாத காங்கிரசின் இரு பிரிவும் இணைவதில் சிக்கல்!

தேசியவாத காங்கிரசின் இரு பிரிவும் இணைவதில் சிக்கல்!

2 மாசி 2026 திங்கள் 07:33 | பார்வைகள் : 679


தேசியவாத காங்கிரசின் இரு பிரிவும் ஒன்றாக இணைவது சாத்தியமற்றதாக தெரிகிறது. மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில், இணைப்புக்காக நடந்து வந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, 'மஹாயுதி' கூட்டணி அரசில் அங்கம் வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், பாராமதியில் சமீபத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.  

அவர் பயணித்த சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்றபோது, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விழுந்து நொறுங்கியதில் அஜித் பவாரும், அவருடன் சென்ற நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்தன.  

ஒருமனதாக தேர்வு

குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலின்போது, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுடன், தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க அஜித் பவார் விரும்பியதாக சொல்லப்பட்டது. அவர் உயிரிழந்ததால், இரு பிரிவுகளும் ஒன்றாக இணையுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக, மும்பையில் நடந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  

இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக அவர் பதவியேற்றார். இதன் மூலம் அம்மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கவர்னர் தேவ் ரத், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மற்றொரு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

பதவியேற்பு விழா முடிந்த நிலையில், புனேவில் உள்ள அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதிக்கு சுநேத்ரா பவார் திரும்பினார். அதே நேரம், பாராமதியில் இருந்த சரத் பவார், நேற்று அங்கு இருந்து புறப்பட்டு மும்பை சென்றார். இதனால், இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழாத காரணத்தால், தேசியவாத காங்கிரசின் இரு அணிகளை இணைப்பது சாத்தியமற்றதாகி இருக்கிறது.  

அவசர முடிவு

இது குறித்து, செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்த சரத் பவார் கூறியதாவது:

தேசியவாத காங்கிரசின் இரு அணிகள் இணைப்பு குறித்து வரும் 12ம் தேதி அறிவிக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். தற்போது அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டதால் இணைப்புக்கான நடைமுறையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது.  

துணை முதல்வராக சுநேத்ரா பதவி ஏற்பது குறித்து என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இது அவரது கட்சி எடுத்த முடிவு. பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.  

அஜித் பவார் உயிரிழந்ததால், அவரது பதவியை வேறு யாராவது பறிக்க முயற்சிக்கலாம் என்பதால், ஆளும் கட்சி சார்பிலும் அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.  

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் படேல், சுனில் தட்கரே இருவரும், கட்சி தனித்து இயங்க வேண்டும் என விரும்புகின்றனர். அதே சமயம், நர்ஹரி ஜிர்வால் போன்ற தலைவர்கள் இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். இதனால், இரு பிரிவும் ஒன்றாக இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்