Paristamil Navigation Paristamil advert login

கொத்தடிமைகளின் முதுகில் ஏறி பா.ஜ., சவாரி: ஸ்டாலின் காட்டம்

கொத்தடிமைகளின் முதுகில் ஏறி பா.ஜ., சவாரி: ஸ்டாலின் காட்டம்

2 மாசி 2026 திங்கள் 08:25 | பார்வைகள் : 727


கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி, தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம். கூட்டணி கட்சியினர், இன்னும் வேகமாக பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும், என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  

சென்னையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நுாற்றாண்டு நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பா.ஜ., தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி, நாட்டை கபளீகரம் செய்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைமை இருக்க வேண்டும் என நினைக்கிறது. மாநில அரசுகளுக்கு, எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என நினைக்கிறது.

பா.ஜ., லோக்சபா தேர்தலில், 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதை விட, இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும். பெரும்பான்மை இல்லாத நேரத்தில் கூட, தன்னுடைய கொடூரமான நகங்களை பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு பா.ஜ., காயங்களை ஏற்படுத்துகிறது. நாம் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும்.  

துரோகங்களுக்கு ஏற்ற, கொத்தடிமைகளை ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி பா.ஜ., சவாரி செய்கிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என வழக்குகளை காட்டி மிரட்டி அமைத்துள்ள கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்கு, பிரதமர் மோடி சமீபத்தில் வந்தார். அங்கு அ.தி.மு.க., என்ற பெயரையே மோடி உச்சரிக்கவில்லை. அ.தி.மு.க., என்பது பா.ஜ.,வின் கிளை அமைப்பு. அந்த கிளை அமைப்பை சேர்ந்த பழனிசாமி, இப்போது மோடி கொடுக்காத வாக்குறுதிகளை எல்லாம் கொடுக்கிறார்.  

கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி, எண்ணத்தை சிதறவிட்டு, தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம். கூட்டணி கட்சியினர் அனைவரும், இன்னும் வேகமாக பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இங்கு நாம் பெறப்போகும் வெற்றி, பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை, நாடு முழுதும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்