தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி: காங்.,
1 மாசி 2026 ஞாயிறு 06:24 | பார்வைகள் : 778
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த, கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி, கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஐவர் குழுவை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்தார். இரண்டு மாதங்கள் கடந்தும், காங்கிரசுடன் பேச்சு நடத்த தி.மு.க., குழு அமைக்கவில்லை.
ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் வேண்டும்' என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், தி.மு.க., நேரடியாக ராகுலிடம் பேசி வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி டில்லி சென்ற தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, ராகுலை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்றால், கூடுதல் தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிடாவிட்டால், ஆட்சி அமைப்பது கடினம். அதனால், ஆட்சியில் பங்கு கொடுக்க வாய்ப்பில்லை. கூட்டணியில், 10 கட்சிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் வரவுள்ளன. எனவே, காங்கிரசுக்கு மட்டும் அதிக தொகுதிகள் கொடுப்பது சாத்தியமற்றது' என, கனிமொழி கூறியுள்ளார்.
இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை வரும் கிரிஷ் ஷோடங்கர், கூட்டணி நிலவரம் குறித்து செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர்கள் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan