Paristamil Navigation Paristamil advert login

மஹா., துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுநேத்ரா  பதவியேற்பு!

மஹா., துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுநேத்ரா  பதவியேற்பு!

1 மாசி 2026 ஞாயிறு 05:23 | பார்வைகள் : 711


மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், 66, விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுநேத்ரா, 62, துணை முதல்வராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம், மஹாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அஜித் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தவரும், அவரின் சித்தப்பாவுமான சரத் பவாரிடம் எதுவும் கேட்காமல் சுநேத்ரா துணை முதல்வராகி உள்ளதால், பிளவுபட்ட தேசியவாத காங்., இணைவதில் குழப்பம் நீடிக்கிறது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார், மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்துக்காக, புனே மா வட்டத்தின் பாராமதிக்கு , கடந்த 28ல், தனியாருக்கு சொந்தமான சிறிய விமானத்தில் சென்றார். அவருடன் இரண்டு விமானிகள் உட்பட நான்கு பேர் பயணித்தனர்.

கடைசி விருப்பம்

பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தன் குருவான சரத் பவாருடன் இணையவிருந்த நிலையில், அஜித் பவாரின் மறைவு தேசியவாத காங்., தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. பிளவுபட்ட தேசியவாத காங்., மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அஜித் பவாரின் கடைசி விருப்பமாக இருந்தது.

அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுநேத்ராவை சந்தித்த தேசியவாத காங்., மூத்த நிர்வாகிகளான பிரபுல் படேல், சகன் புஜ்பால் உள்ளிட்டோர், கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும்படியும், துணை முதல்வராக பதவியேற்கும்படியும் வலியுறுத்தினர். இதை சுநேத்ரா ஏற்றார்.

இந்நிலையில், தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக சுநேத்ரா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்து பிரபுல் படேல், சகன் புஜ்பால் உள்ளிட்டோர் வழங்கினர்.

பெருமை

இதை த் தொடர்ந்து, லோக் பவனில்  பதவியேற்பு விழா நடந்தது. துணை முதல்வராக சுநேத்ரா பதவியேற்றார்.

அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், மஹாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

துணை முதல்வராக பதவியேற்ற சுநேத்ராவுக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உட்பட தே.ஜ., கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்