Paristamil Navigation Paristamil advert login

விரைவில் போர் முடிவுக்கு வரணும்; இஸ்ரேல் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

விரைவில் போர் முடிவுக்கு வரணும்; இஸ்ரேல் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

2 பங்குனி 2026 திங்கள் 10:56 | பார்வைகள் : 1624


மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி  தொலைபேசியில் பேசினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதில் தாக்குதல் ஆகியவற்றுக்கு மத்தியில், முன்கூட்டியே போர் நிறுத்தம் தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி  தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாக கொண்டு செயல்பட வலியுறுத்தினேன். போர்களை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதேபோல்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் மோடி பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்து, இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழும் இந்திய சமூகத்தை கவனித்துக்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்.  இந்தக் கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு ஆதரவாக இருக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.