Paristamil Navigation Paristamil advert login

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி, மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி, மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

1 பங்குனி 2026 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 185


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், இன்று மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குஜராத் தலைநகர் ஆமதாபாதிலிருந்து தனி விமானத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு சென்னை வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர் ரவி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பின், கிண்டியில் உள்ள லோக் பவனில் இரவு தங்கினார். அங்கு அவரை, பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். இன்று காலை 10:40 மணிக்கு, ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் அரசு திட்டங்கள் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, தஞ்சை விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு விமானப்படை விமான நிலையத்திலிருந்து, தனி விமானத்தில் மதுரை செல்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து காரில், திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி, மாலை 3:55 மணிக்கு முருகன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பிரமாண்டமான தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதுரை பொதுக்கூட்டத்தை முடித்து, தனி விமானத்தில் இன்றிரவே டில்லி செல்கிறார்.


புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள்

சென்னையில் 4வது புதிய பாதை ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் முதல் கட்டமாக, 105 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள், கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, ஒன்பது ரயில் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்த கட்டமாக, காரைக்குடி, மணப்பாறை, மெராப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்துார், திருவாரூர் ரயில் நிலையங்களில், 105 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி, மதுரையில் இன்று நடக்கும் நிகழ்வில் திறந்து வைக்கிறார். இதேபோல், சென்னையில் கடற்கரை - எழும்பூர் இடையே, 4.3 கி.மீ., நான்காவது புதிய பாதை பணிகள், 273 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாதையையும், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.