Paristamil Navigation Paristamil advert login

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் தானம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் தானம்!

26 மாசி 2026 வியாழன் 04:53 | பார்வைகள் : 170


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஆர்.நல்லகண்ணு, 101, சென்னையில் நேற்று காலமானார். அவர் விரும்பியபடி, அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக, இன்று முறைப்படி தானம் செய்யப்பட உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு. இவரது மனைவி ரஞ்சிதம், 2016ல் உயிரிழந்தார். அதன் பின், வயது மூப்பு காரணமாக, வீட்டில் ஓய்வில் இருந்த நல்லகண்ணு, அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்; மேலும், கனிமவள கொள்ளை தடுப்பு தொடர்பாக, பசுமை தீர்ப்பாயம் போன்றவற்றில் வாதாடி வந்தார்.

கடந்தாண்டு ஆக., 22ம் தேதி வீட்டில் தவறி விழுந்தார். இதில், தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போதே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.

கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புவதுமாக இருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

நல்லகண்ணு பிப்., 1ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 நாட்களாக சிகிச்சையின்போது, அவரது உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன.

பல்துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர். எனினும், நேற்று காலையில் இருந்து, மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும், முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நேற்று மதியம் 1:55 மணியளவில் நல்லகண்ணு உயிர் பிரிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

நல்லகண்ணுவின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்காக, சென்னை, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று பிற்பகல் 3:00 மணி வரை வைக்கப்படுகிறது.  

அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டா லின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

நல்லகண்ணு மறைவுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2016ல் நல்லகண்ணு தன் உடலை மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக, சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு தானம் செய்வதாக எழுதிக் கொடுத்திருந்தார்.  

அவர் விரும்பியபடி, சென்னை மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அவரது உடலை தானம் செய்ய, குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். எனவே, தி.நகரில் இருந்து அவரது உடல் பேரணியாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு இன்று முறைப்படி வழங்கப்பட உள்ளது.  

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய குடும்பத்தில், 1925 டிச., 26ம் தேதி, ராமசாமி - கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணு, பள்ளி ஆசிரியர் வாயிலாக கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

கடந்த 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டம் என, வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கையில் கழித்தார்.  

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, இந்தியாவும் சுதந்திரம் பெற்றிருந்தது. பின், ரஞ்சிதம் என்பவரை 1958ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர்.  

விவசாய இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி என 18 வயதில் துவக்கிய பணிகளை, 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்த அதே தேதியில் பிறந்த நல்லகண்ணு, அக்கட்சியின் மாநிலச் செயலராக நான்கு முறை என, 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதேபோல், 25 ஆண்டுகள் விவசாய சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.  

இவரது அர்ப்பணிப்பை பாராட்டி, 80 வயதில் கட்சி சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி அவருக்கு வழங்கப்பட்டது. அதையும் கட்சி வளர்ச்சிப் பணிக்கு திருப்பிக் கொடுத்து விட்டார். அதேபோல், தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் விவசாய சங்கத்திற்கும், கட்சிக்கும் பிரித்துக் கொடுத்தார்.  

மேலும், 2022ல் தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வழங்கியது. இதற்காக கொடுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன், தன் பணம் 5,000 ரூபாய் சேர்த்து, முதல்வர் நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்