Paristamil Navigation Paristamil advert login

தமிழக சட்டசபை தேர்தல் தள்ளிப்போகிறது! மே மாதத்தில் நடத்த திட்டம்?

தமிழக சட்டசபை தேர்தல் தள்ளிப்போகிறது! மே மாதத்தில் நடத்த திட்டம்?

25 மாசி 2026 புதன் 07:22 | பார்வைகள் : 184


தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகும் என தெரியவந்துள்ளது. இதனால், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அட்டவணை வெளியீடு, இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த, தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழு, இன்று சென்னை வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில அரசுகளின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசுகளை தேர்வு செய்ய வேண்டும்.

இம்மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் வாயிலாக, தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, ஐந்து மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும், ஐந்து கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமின்றி, 497 செலவின பார்வையாளர்களும், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 2021 ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் காலம். மே மாதம் கத்திரி வெயில் சீசன் துவங்கும். இதனால், பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.

கடந்த 2016 மே மாதம் கடுமையான வெயில் காலத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பார்வையாளர்கள், வாக்காளர்கள் உள்ளிட்ட பலரும் அவதிக்கு ஆளாகினர். எனவே, வெயில் தீவிரம் அடைவதற்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2021, ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடந்தது. இம்முறை, மீண்டும் மே மாதம் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர், இன்று இரவு சென்னை வருகின்றனர்.  

நாளை முதல் 28ம் தேதி வரை, தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், கமிஷனர்கள், தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர் . அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தமிழகத்தில் பல சட்டசபை தேர்தல்கள், மே மாதம் தான் நடந்துள்ளன. கொரோனா காலம் என்பதால், 2021 சட்ட சபை தேர்தல் முன் கூட்டியே ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. எனவே, வெயிலை வைத்து தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. சில மாநிலங்களில் ஐந்து கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழக தேர்தல் மே மாதத்திற்கு தள்ளிப் போகுமா என்பது, ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே தெரியவரும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் கருத்துக்கள் அடிப் படையில், தேர்தல் தேதியை கமிஷன் முடிவு செய்யும்.

இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அட்டவணை அறிவிப்பு, இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போடப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்