திரௌபதி 2' படத்திற்கு வந்த சிக்கல்...
21 தை 2026 புதன் 15:37 | பார்வைகள் : 386
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார்.
சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மேலூரை சேர்ந்த மகாமுனி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாளன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி- 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளன. திரௌபதி 2 படத்தில் வீர வல்லாள தேவனை, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இயக்குநர் மோகன் ஜி சித்தரித்துள்ளார். திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இது உள்நோக்கம் கொண்டது.
இது கள்ளர் சமூகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு அவசரம் அவசரமாக யூ/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. யூ/ஏ (U/A) சான்றிதழை திரும்ப பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரௌபதி 2 படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும். படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திரௌபதி 2 படத்துக்கு, டிச. 31-ல் தணிக்கை வாரியம் யூ/ஏ சான்று வழங்கியுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan