Paristamil Navigation Paristamil advert login

இப்போது அவர் எனது பாஸ்; நிதின் நபின் பதவியேற்பு விழாவில் ! மோடி

இப்போது அவர் எனது பாஸ்; நிதின் நபின் பதவியேற்பு விழாவில் !  மோடி

21 தை 2026 புதன் 09:15 | பார்வைகள் : 158


நான் பாஜ கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜ தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு  இருந்தது.   அக்கட்சியின் செயல் தலைவராக நிதின் நபின் கடந்த டிச.,14 ல் நியமிக்கப்பட்டு இருந்தார். பாஜ தேசிய தலைவர் பதவிக்கு  நேற்று தேர்தல் நடந்தது.   இதில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்திருந்தன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 20) பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

உலகின் மாபெரும் கட்சியான பாஜவின் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். கட்சியை வலுப்படுத்தப் பங்களித்த பாஜவின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை மாறாது

நிதின் நபின் இப்போது நமது தலைவர்; அவரது பொறுப்பு பாஜவுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும்.

நான் பாஜ கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ்.

கட்சியின் தலைவர்கள் மாறலாம், ஆனால் கொள்கை மாறாது. தலைமை மாறுகிறது, ஆனால் திசை மாறுவதில்லை. பாஜ ஒரு வித்தியாசமான கட்சியாக உருவெடுத்தது, இப்போது அது ஒரு ஆளும் கட்சியாக தன்னை நிரூபித்துள்ளது.

இளமையும், அனுபவமும்!

நான் ஒரு கட்சித் தொண்டன், கட்சி தொடர்பான விஷயங்களில் நிதின் நபின் தான் முடிவு செய்வார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழுப் பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து நிதின் நபின் தன்னை நிரூபித்துள்ளார். நிதின் நபினிடம் இளமையும், நீண்ட கால அனுபவமும் உள்ளது.

இது ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில், ஒரு அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிப்பது கடினமாக இருக்கிறது, ஆனால் பாஜ இந்த போக்கை முறியடித்துள்ளது. பல்வேறு  மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பாஜ விரைவில் கேரளாவிலும் ஆட்சி அமைக்கும்.

நம் முன் உள்ள பெரிய சவால் அர்பன் நக்சலிசம். இதன் நோக்கம் சர்வதேச அளவில் மாறி வருகிறது. மோடியைப் பற்றி நேர்மறையாக பேசுபவர்களை, எழுதுபவர்களை திட்டமிட்டு அவமானப் படுத்துகின்றனர். அவர்கள் வேட்டையாடப்பட்டு தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் குரல் அமைதியாக்கப்படுவதுடன், மீண்டும் பேச அனுமதிக்கப்படவில்லை. இது தான் அர்பன் நக்சலிசத்தின் முறை. இது போன்ற குழுக்கள்பல ஆண்டுகளாக பாஜவை தனிமைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களை நாடு முழுவதும் தீண்டத்தகாதர்களாக நடத்தி வருகின்றனர்.

தற்போது தேசம், அர்பன் நக்சல்களின் செயல்களை புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க அர்பன் நக்சல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.நாம் ஒவ்வொரு சவாலையும் நமது முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

இன்று நாட்டின் முன் உள்ள மிக முக்கியமான சவால் ஊடுருவல்காரர்கள். உலகில் யாரும் தங்கள் நாட்டில் ஊடுருவல்காரர்களை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்தியாவும் ஊடுருவல்காரர்கள் அதன் ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை பறிக்க அனுமதிக்க முடியாது.

ஓட்டு வங்கி

ஊடுருபவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது மிகவும் முக்கியம்.மேலும் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் கட்சிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்