Paristamil Navigation Paristamil advert login

'இரும்புக் கை மாயாவி'யை சூர்யாவிடமிருந்து கைமாறுகிறதா?

'இரும்புக் கை மாயாவி'யை சூர்யாவிடமிருந்து கைமாறுகிறதா?

17 தை 2026 சனி 15:34 | பார்வைகள் : 435


2026 பொங்கலை முன்னிட்டு எண்ணற்ற படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தன. சில புதிய படங்களின் அறிவிப்புகளும் வந்தன. அந்த விதத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு அறிவிப்பு அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜின் கூட்டணி.

'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2, ரோலக்ஸ், லியோ 2, விக்ரம் 2, இரும்புக் கை மாயாவி' என எந்தப் படத்தை லோகேஷ் ஆரம்பிப்பார் என்று கேள்வி எழுந்தது. அதோடு ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை அவர்தான் இயக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை.

அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள 23வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. மீண்டும் தமிழ் இயக்குனருடன் அல்லு அர்ஜுன் படமா என தெலுங்கு இயக்குனர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதற்கு முன்பு சில பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், சூர்யா நடிக்க 'இரும்புக் கை மாயாவி' கதையை படமாக எடுக்க உள்ளேன் என்று சொல்லியிருந்தார். அந்தக் கதையைத்தான் தற்போது அல்லு அர்ஜுனுக்கு மாற்றிவிட்டாரா என சூர்யா ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இது குறித்த சந்தேகங்களை அவர்கள் எழுப்பி வருகிறார்கள்.

'இரும்புக் கை மாயாவி' என்பது 80களில் வெளிவந்த, காமிக்ஸ் கதைகள் என்று சொல்லப்படும், சித்திரக் கதை கதாபாத்திரங்களில் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். தெலுங்கில் 'உக்குபுடி மாயாவி', மலையாளத்தில் 'உருக்கை மாயாவி' என்று கூட அந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

60களில் பிரிட்டிஷ் காமிக் உலகில் 'தி ஸ்டீல் கிளா' என்ற பெயரில் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் தமிழாக்கம் தான் 'இரும்புக் கை மாயாவி' கதைகள்.

'இரும்புக் கை மாயாவி'யை சூர்யாவிடமிருந்து அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் 'கை' மாற்றியது உண்மைதானா என்பதன் மாயம், மர்மம் விரைவில் வெளிவரலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்