Paristamil Navigation Paristamil advert login

கடற்படையில் சேர்க்கப்பட்டது அதிநவீன போர்க்கப்பல் தாராகிரி

கடற்படையில் சேர்க்கப்பட்டது அதிநவீன போர்க்கப்பல் தாராகிரி

30 கார்த்திகை 2025 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 1031


 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலான தாராகிரி, நம் கடற் படையில் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 'பிராஜெக்ட் 17ஏ' திட்டத்தின்படி, அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த திட்டத்தின்படி, நீலகிரி பிரிவில் நான்காவது கப்பலான தாராகிரி, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மசாகான்டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், தாராகிரி போர்க்கப்பல், நம் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது.

'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்த கப்பல், எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் வாய்ந்தது.

சக்திவாய்ந்த ஆயுதங்கள், ரேடார்கள், பிரம்மோஸ் ஏவுகணை, தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ராக்கெட்டுகள் உள்ளிட்டவை தாராகிரியில் இடம்பெற்றுள்ளன.

'பிராஜெக்ட் 17ஏ' திட்டத்தின்படி, கடந்த 11 மாதங்களில் நம் கடற்படைக்கு வழங்கப் பட்டுள்ள நான்காவது போர்க்கப்பல் இதுவாகும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மூன்று கப்பல்களையும் உருவாக்க 93 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், நான்காவது கப்பலான இது, 81 மாதங்களிலேயே உருவாக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் கீழ், மீதமுள்ள மூன்று கப்பல்கள், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நம் கடற்படையில், 1980 - 2013 வரை பயன்பாட்டில் இருந்த ஐ.என்.எஸ்., தாராகிரியின் மறுவடிவமான தாராகிரி, திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு, கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026