Paristamil Navigation Paristamil advert login

 சங்கி படையே வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

 சங்கி படையே வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

15 மார்கழி 2025 திங்கள் 05:08 | பார்வைகள் : 145


பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம் தான் என்று அமித் ஷா சொல்கிறார். அவர் மட்டுமல்ல; சங்கி படையையே கூட்டி வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில், தி.மு.க., இளைஞர் அணி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

ஆணவம்

அப்போது, அவர் கூறியதாவது: நம் கொள்கை எதிரிகள், துணை முதல்வர் உதயநிதியை, 'மோஸ்ட் டேஞ்சரஸ்' என்று புலம்புகின்றனர். அந்த அளவிற்கு, கொள்கையில் உதயநிதி உறுதியாக உள்ளார். மத்திய பா.ஜ., அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில், வலதுசாரி மற்றும் பிற்போக்கு சக்திகள் ஆக்ரோஷத்துடன் செயல்படுகின்றன.

பொய்கள், அவதுாறுகள், பிற்போக்கு எண்ணங்களை, தேன் தடவிய வார்த்தைகளால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கின்றனர். அதை தடுக்க, மாற்று மருந்தான, நம் கருத்துக்களை பரப்ப வேண்டும். இப்போது நம் தோளில், தமிழகத்தையும், தமிழ் மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவையும், அதன் பன்முகத் தன்மையையும் காக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பா.ஜ.,விற்கு எதிராக, கொள்கை ரீதியாக போராடும் மாநில கட்சி, தி.மு.க., மட்டும்தான்.

அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, தமிழகத்தை மட்டும்தான். அதனால் தான் அமித் ஷா போன்றவர்களுக்கு, நம் மீது எரிச்சல். 'பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம்தான்' என்று அவர் சொல்கிறார். அவர் மட்டுமல்ல; அவர் சங்கி படையையே கூட்டி வந்தாலும், அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழகம். எங்களுடைய 'கேரக்டரையே' புரிந்து கொள்ள மாட்டேங்கிறீங்களே. அன்போடு வந்தால் அரவணைப்போம்; ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்.

துரோகம்

தேர்தல் நெருங்கி விட்டது. 10 ஆண்டுகள், தமிழகத்தை படு பாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க.,வினர், உத்தமர் போல் வேஷம் போட்டு வந்து ஓட்டு கேட்பர். தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ள பா.ஜ.,வினர், வழக்கம்போல் பொய் பிரசாரம் செய்வர். இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடை போடப் போகிறோமா அல்லது பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா என்பதற்கு விடை அளிக்கும் தேர்தலாக இது இருக்கும். தி.மு.க.,வின் எதிர்காலத்தில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்