புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படும் கோவிட் தடுப்பூசி

23 ஐப்பசி 2025 வியாழன் 06:53 | பார்வைகள் : 103
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பைசர் (Pfizer) மற்றும் மோடெர்னா (Moderna) போன்ற COVID-19 தடுப்பூசிகள், சில புற்றுநோயாளிகளுக்கு எதிர்பாராத நன்மையை வழங்கக்கூடும் என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் MD ஆண்டர்சன் புற்றுநோய் மையம் (Houston) மற்றும் புளோரிடா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேசர் Nature இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
முன்னேற்ற நிலை நுரையீரல் அல்லது தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், சிகிச்சை தொடங்கிய 100 நாட்களுக்குள் பைசர் Pfizer அல்லது மொடர்னா Moderna தடுப்பூசி எடுத்திருந்தால், அவர்களின் வாழ்நாள் குறிப்பிடத்தக்க அளவில் நீண்டிருந்தது என்று ஆய்வு கூறுகிறது.
இது வைரஸ் தொற்றுகளுடன் தொடர்புடையது அல்ல — மாறாக, இந்த தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் நோய் எதிர்ப்பு அமைப்பை (immune system) மேம்படுத்தி, புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறனை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
“இந்த தடுப்பூசி உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை செயல்படுத்தும் அலாரம் போல செயல்படுகிறது,” என்று MD ஆண்டர்சனின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் அடம் கிரிப்பின் தெரிவித்தார்.
இது சிகிச்சைக்கு எதிர்ப்பு காட்டும் கட்டிகளை (tumors) மீண்டும் சிகிச்சைக்கு உணர்திறனாக்குகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி தொடர்பில் தொடர்ந்தும் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.