கேபிள் திருட்டு காரணமாக பரிஸ்- லியோன் இடையே போக்குவரத்து பாதிப்பு!!

28 ஆவணி 2025 வியாழன் 21:24 | பார்வைகள் : 477
பரிஸ் மற்றும் லியான் இடையிலான உயர் வேக ரயில் போக்குவரத்து, Creusot (Saône-et-Loire) பகுதியில் நடைபெற்ற கேபிள் திருட்டின் காரணமாக வியாழக்கிழமை முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு, சிக்னல் பணிகளில் கோளாறு ஏற்படுத்தியுள்ளது. இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், SNCF எந்த ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், பழுது சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலைமை சாதாரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியை தவிர்க்க, சில ரயில்கள் பழைய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற கேபிள் திருட்டுகள் புதுமையானவை அல்ல; கடந்த ஜூனிலும் Lille அருகே 600 மீட்டர் கேபிள்கள் திருடப்பட்டன.
இந்த தாமிரக் கேபிள்கள், சிக்னல் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேபிள்களின் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதால், அவை திருடப்பட்டு மறுவிற்பனை செய்யப்படுகின்றன என்று பராமரிப்பு பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.