தயாரிப்பு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்கும் ரவி மோகன் காரணம் என்ன ?

16 ஆடி 2025 புதன் 12:14 | பார்வைகள் : 723
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவில், கோவை பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தன்னுடன் இரண்டு படங்களில் பணிபுரிய ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருந்ததாகவும், ஆனால் படப்பிடிப்பை தொடங்காததால் தன்னால் வேறு படங்களிலும் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் வேறொரு தேதியை ஒதுக்கிய நிலையில், அந்த தேதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவில்லை என்றும், இதனால் இரண்டாவது ஒப்பந்தமும் செல்லாததாகிவிட்டதால் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் ரவி மோகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தனக்கு முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை திருப்பி தரும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், தனக்கு ஏற்பட்ட இழப்புக்குத் தயாரிப்பு நிறுவனம் தான் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரவி மோகன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதத்திற்குப் பின்னர், நீதிபதி இந்த வழக்கை விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன் ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.