கைதிகளிடம் சிறிய வகை தொலைபேசிகள்... சிறைச்சாலைகள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை!!

20 வைகாசி 2025 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 611
சிறைச்சாலை கைதிகளிடம் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இன்று மே 20, செவ்வாய்க்கிழமை இதற்கு எதிரான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இன்று காலை முதல் பல ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இலகுவில் மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய, பாதுகாப்பு கதவுகளில் உள்ள கண்காணிப்பு கருவிகள் அடையாளம் கண்டுகொள்ள முடியாத சிறியவகை தொலைபேசிகள் கைதிகளின் கைகளுக்குச் செல்வதாகவும், அவற்றின் மூலம் கைதிகள் வெளியுலகத் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறான சிறிய வகை தொலைபேசிகளை விற்பனை செய்வோர் அல்லது நாட்டுக்குள் கொண்டுவருவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் 5,000 தொலைபேசிகள் அவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மொத்தமாக 40,000 தொலைபேசிகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.