அமெரிக்காவுக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை

23 சித்திரை 2025 புதன் 05:59 | பார்வைகள் : 726
அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும், அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.