1 மாசி 2018 வியாழன் 14:30 | பார்வைகள் : 23278
உலகில் மிக அழகான பகுதி என வர்ணிக்கப்படும் ஒரு சுற்றுலாத்தலத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்...
தென்கிழக்கு பிரான்சின் Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள மிகப்பெரும் மலை அது. மலையினை இரண்டாக பிளந்து, குறுக்கே பச்சை நிறத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் Les Gorges du Verdon. ஆனால் அதை இப்படி சாதாரணமாக சொல்லிவிட முடியாது.
இரண்டு செங்குத்தான மலைகளுக்கு நடுவே உள்ள ஆற்றில் நீங்கள் இறங்கி நீராடினால்...?? படகு சவாரி செய்தால்..?? கொஞ்சம் கதி கலங்கச் செய்யும் விளையாட்டுத்தான்.
25 கிலோ மீட்டர்கள் நீளமும், 700 மீட்டர் ஆழமும் கொண்டது இந்த ஆறு. vert என்றால் பச்சை! பச்சை நிறத்தில் இந்த ஆற்றை பார்ப்பதே பேரழகுதான்.
இங்கு செல்வது மிக சுலபம். Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள Moustiers-Sainte-Marie நகருக்குச் செல்லுங்கள் (அரை நாள் பயணம்) அங்குதான் இந்த ஆற்றில் ஆரம்ப புள்ளி உள்ளது. உங்களுக்கு 'பெடல்' வசதி உள்ள ஒரு படகு, உயிர் காக்கும் 'ஜக்கட்' என அனைத்தும் அங்கு வாடகைக்கு கிடைக்கும்.
தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினால்.. முதல் 500 மீட்டர்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஆறு.. பின்னர் விஸ்வரூபம் எடுத்து.. மிக மிரட்சியாக காட்சியளிக்கும்.
சிறிது நேரம் படகினை 'பெடல்' செய்தால் இந்த சுற்றுலாத்தலத்தின் மையப்பகுதிக்கு வந்துவிடுவீர்கள். சிறு அசைவு கூட இல்லாம அமைதியான நீரோடை அது. வெயில் காலத்தில் மெல்லிய குளிருடன் 7Up மென்பானம் போல் தண்ணீர் காட்சியளிக்கும்.
உங்களுக்கு நீச்சல் தெரிந்தால், எவ்வித பயமுமின்றி தாராளமாய் படகில் இருந்து குதிக்கலாம். ஆழத்துக்குச் சென்று காவிக் கண்டை போலிருக்கும் சேற்றினை அள்ளி வரலாம். உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் பாயலாம்.
தண்ணீரில் இருந்து மேலே வானத்தை பார்த்தால்... 'இதோ விழுந்துவிடும்' போல் காட்சியளிக்கும் இரு மலைகளும் அட்டகாசமான உணர்வைத் தரும். அதன் மேலே நீல வானம் மட்டும் தான்.
மிக முக்கியமானதொரு விடயம் சொல்லவேண்டும். அது நாளை.. அதுவரை, படகை விட்டு இறங்காதீர்கள் !!
(சொற்பதம். காவிக்கண்டை - Chocolate )