Paristamil Navigation Paristamil advert login

பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை

 பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை

17 புரட்டாசி 2024 செவ்வாய் 13:42 | பார்வைகள் : 2024


'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் ஒரு காமெடி நிகழ்ச்சியாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாகவும் தற்பேதைய ஐந்தாவது சீசனையும் டிவி ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வந்தனர். எந்த விதமான சர்ச்சைகளும் இல்லாமல் கடந்த நான்கு சீசன்களைக் கடந்தது அந்த நிகழ்ச்சி. ஆனால், தற்போதைய ஐந்தாவது சீசனில் அதன் தொகுப்பாளரான மணிமேகலை திடீரென விலகியது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதிலும் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் ஆரம்ப அரை மணி நேரத்தில் 'குக்குகள்', கோமாளிகளைத் தேர்வு செய்யும் வரை மட்டுமே அவர் இருந்தார். அதன்பின் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை என மற்றொரு தொகுப்பாளரான ரக்ஷன் அறிவித்தார். அதன்பின் மணிமேகலை அவருடைய இன்ஸ்டா தளத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஒரு பதிவு போட்டார். அடுத்து ஒரு வீடியோ ஒன்றையும் அவரது யு டியுப் சேனலில் போட்டிருந்தார். அதற்கு மட்டுமே தற்போது வரை 50 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. அப்படியென்றால் ரசிகர்கள் எந்த அளவிற்கு உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தான் விலகியதற்குக் காரணம் 'பிரியங்கா' என மணிமேகலை சொல்லாமல், 'குக்' ஆக இருக்கும் ஒரு தொகுப்பாளர் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் ரசிகர்களுக்கு அது 'பிரியங்கா'வைத்தான் குறிப்பிடுகிறது என்பது தெரியாதா ?. இவர்களுக்குள் என்ன சண்டை என்பது குறித்து நேரிலிருந்து பார்த்தவர்கள் போல பல யு டியுப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் மில்லியன் பார்வைகள் கிடைத்து வருகின்றன.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குக் கூட ஒரு வாரத்தில் அவ்வளவு பார்வைகள் ஓடிடி தளங்களில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒரு டிவி நிகழ்ச்சியில் நடந்த 'ஈகோ' மோதல் இந்த அளவிற்கு பரபரப்பாகப் பேசப்படுவதன் காரணம் பலருக்கும் புரியவில்லை. சண்டை, சச்சரவுகள், டிரோல்கள், கிண்டல், கேலி ஆகியவைதான் இந்தக் காலத்திய யு டியுப் ரசிகர்களுக்குத் தேவைப்படுவதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

'குக் வித் கோமாளி'யின் முன்னாள் 'ஜட்ஜ்' ஆக இருந்த செப், அதைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வேறொரு டிவியில் இதே போன்றதொரு நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்தனர். தங்களது பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சி பக்கம் போய்விடக் கூடாது என 'குக் வித் கோமாளி'யை ஒளிபரப்பும் போட் டிவி நிறுவனம் இந்த 5வது சீசனில் என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனால், இந்த சீசனில் 'குக்' ஆக பிரியங்கா, யு டியூப் பிரபலம் இர்பான் ஆகியோர் 'குக் வித் கோமாளி'யின் தரத்தையே சிதைத்துவிட்டனர் என்பதுதான் பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியை 'பிக் பாஸ்' நிகழ்ச்சி போல சண்டை சமையல் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்