27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றிய இலங்கை
8 ஆவணி 2024 வியாழன் 08:45 | பார்வைகள் : 800
3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பத்தும் நிசங்க, அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுத் தந்தனர்.
அவிஷ்க பெர்னாண்டோ அதிக பட்சமாக 96 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார்.
அவருடன் சேர்ந்து குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 45 ஓட்டங்களையும் அதிக பட்சமாக குவித்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்தது.
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
ரோகித் சர்மா 35 ஓட்டங்களிலும், சுப்மன் கில் (6), விராட் கோலி(20), ரிஷப் பண்ட்(6), ஸ்ரேயாஸ் ஐயர்(8), அக்சர் படேல் (2) என சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
வாஷிங்டன் சுந்தர் கடுமையாக போராடி 30 ஓட்டங்கள் குவித்தார், ஆனால் அவரும் தீக்ஷனா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் மூலம் 26.1 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இலங்கை அணி 3வது ஒருநாள் போட்டியில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதில் ,முதல் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததுடன் இரண்டாவது போட்டியை இலங்கை அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 110 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றியுள்ளது.