விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
10 ஆடி 2024 புதன் 08:27 | பார்வைகள் : 901
விவாகரத்துக்கு பிறகு, இஸ்லாமிய பெண் தனது கணவரிடம் இருந்து ஜிவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 10) நீதிபதிகள் நாக ரத்தினம் மற்றும் அகஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இஸ்லாமிய நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இஸ்லாமிய பெண் ஜிவனாம்சம் கேட்பது, விவாகரத்து தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி முடியாது'' என வாதிட்டார். இதனை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜிவனாம்சம் அளிப்பது தொண்டு போன்றது ஒன்றும் அல்ல. அது திருமணமான பெண்ணின் அடிப்படை உரிமை.
மதங்களைக் கடந்து, பாலின சமத்துவத்தைக் கொண்டு வரவும், பெண்களும் பொருளாதார பாதுகாப்புப் பெறவும் இது வழிவகை செய்கிறது. சட்டப்பிரிவு 125 ஆனது, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தக்கூடியது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இஸ்லாமிய நபர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.