Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

50வது படத்தில் அதகளப்படுத்தினாரா தனுஷ்?

50வது படத்தில் அதகளப்படுத்தினாரா தனுஷ்?

26 ஆடி 2024 வெள்ளி 11:06 | பார்வைகள் : 9810


ஒரு குடும்பக் கதையாக ஆரம்பமாகி, அண்ணன், தம்பிகள், தங்கை பாசக்கதையாக மாறி, அங்கிருந்து கேங்ஸ்டர் கதையாக மாறி, சில பல கொலைகளுக்குப் பிறகு துரோகக் கதையாக மாறி, பழி வாங்கும் கதையாக முடிவுக்கு வருகிறது இந்த 'ராயன்'.

குடும்பத்தில் மூத்த மகன் தனுஷ். அவரது தம்பிகள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தங்கை துஷாரா விஜயன். சிறுவர்களாக இருந்த போது தங்கை பிறந்த சில நாட்களில் வெளியூருக்குச் சென்ற பெற்றோர் வீடு திரும்பவில்லை. அந்தத் தங்கையை ஊர் பூசாரி விற்க முயல அவரைக் கொன்று விட்டு, தம்பிகள், தங்கையுடன் வேறு ஊருக்குச் செல்கிறார்கள். அந்த ஊரில் செல்வராகவன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.

வளர்ந்து இளைஞர்களான பின் வண்டியில் ஒரு பாஸ்ட்புட் கடையை நடத்துகிறார்கள். சந்தீப் கிஷன் குடிப்பழக்கம், பெண் பழக்கம், அடிக்கடி சண்டை எனத் திரிகிறார். காளிதாஸ் கல்லூரியில் படிக்கிறார். அண்ணன்கள் மூவருமே தங்கை துஷாரா மீது பாசமாக இருக்கிறார்கள். அந்தப் பகுதியின் தாதாக்கள் சரவணன், எஸ்ஜே சூர்யா. இருவருமே பகையாளிகள். ஒரு நாள் சரவணன் மகனை குடி போதையில் கொன்றுவிடுகிறார் சந்தீப் கிஷன். அதன்பின் அனைத்துமே மாறுகிறது. தனுஷ் தனது தம்பிகளுடன் சேர்ந்து சரவணனையும் கொன்றுவிடுகிறார். அதைக் கண்டுபிடிக்கும் எஸ்ஜே சூர்யா தன்னுடன் வந்து சேர்ந்துவிடுமாறு தனுஷை வற்புறுத்துகிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் தனுஷ். இதன்பின் நடக்கும் சில திருப்பங்கள், தனுஷ், சூர்யா மோதலை அதிகமாக்குகிறது. இதில் யார் வென்றார்கள் என்பதுதான் மீதிக் கதை.


நடிகராக தான் நடிக்கும் 50வது படத்தைத் தானே இயக்கவும் செய்துள்ளார் தனுஷ். காதல் கதைகளில் கதாநாயகனாக வெற்றிகரமாகத் துவங்கிய அவரது சினிமா பயணம், ஆக்ஷன் நோக்கி பயணித்த போது ஆரம்பத்திலேயே தள்ளாட ஆரம்பித்தது. அவரை ஆக்ஷன் கதாநாயாகனாக ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் தயங்கினார்கள். ஆனால், இப்போது அந்த ஆக்ஷனுக்கும் தன்னைப் பொருத்தமானவராக மாற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் இயக்குனர் தனுஷை விடவும் நடிகர் தனுஷ் நிறையவே உழைத்திருக்கிறார். ஹீரோயிசக் காட்சிகளில் அவரது நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசையில் தூக்கலாகத் தெரிகிறது. மொட்டை அடித்தது போல ஹேர்ஸ்டைல், கொஞ்சம் பெரிய மீசை, பயமில்லாத நடை, வெறித்த பார்வை என ராயன் கதாபாத்திரத்தில் தனுஷ். இடைவேளை வரை பாசமான அண்ணன், அதன்பின் கொலை வெறி அண்ணன் என அந்த மாற்றத்தைத் தெளிவாகச் செய்திருக்கிறார்.

தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம். அண்ணன் தனுஷிற்கு 'டப்' கொடுப்பவராக சந்தீப். தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்யும் குணம். அண்ணனை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் தயங்காதவர். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணன் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவராக காளிதாஸ். ஆனால், ஒரு கட்டத்தில் அவரும் மாறும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

தனுஷின் பாசமான தங்கையாக துஷாரா விஜயன். சிறுவனாக இருக்கும் போது தனக்குத் தங்கைதான் வேண்டும் என்கிறார் சிறுவன் தனுஷ். அதுபோலவே தங்கை பிறந்ததால் பாசமாக அவரே துர்கா எனப் பெயர் வைக்கிறார். அந்த பாசத் தங்கைக்காக வேண்டாமென்று விட்ட ஆயுதத்தை மீண்டும் தூக்குகிறார். அண்ணனுக்காக தங்கை துஷாராவும் ஆயுதத்தை எடுக்கிறார். மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்துள்ளார் துஷாரா.

வில்லனாக எஸ்ஜே சூர்யா, லோக்கல் தாதாவாக நடித்திருக்கிறார். செய்கையை விட பேச்சுதான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. தனுஷுக்கு அடைக்கலம் கொடுத்து அண்ணனாகப் பார்த்துக் கொள்பவராக செல்வராகவன். ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார் வரலட்சுமி. இரண்டாம் பாதியில் இரண்டு காட்சிகளில் அவர் பார்க்கும் பார்வை சிக்சர் அடித்துவிடுகிறது. சந்தீப் காதலியாக அபர்ணா பாலமுரளி, கடைசியில் அவர் எடுக்கும் முடிவு சரியா என்று கேள்வி எழுப்புகிறது. போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ். திடீரென வந்து திடீரென காணாமல் போய் திடீரென வந்து முடித்து வைக்கிறார். அருமையான நடிகர்கள், நடிகைகளைத் தேர்வு செய்துள்ளதால், அவர்களது 'பர்பாமன்ஸ்' பேச வைத்துவிடுகிறது.

படத்தின் மொத்த தாக்கத்திற்கு முழு காரணம் ஏஆர் ரஹ்மான். அவரது பின்னணி இசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு காட்சிகளோடு ஒன்றி, தனி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்' ஆகிய இரண்டு பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு ஓஹோ சொல்ல வைக்கிறது.

இடைவேளை வரையிலான படம் கடந்து போவது தெரியாமல் நகர்கிறது. அண்ணன், தம்பிகள், தங்கை பாசம் என குடும்பக் கதையாகவும் போகிறது. இடைவேளைக்குப் பின் மோதல், கொலைகள், துரோகம் என அப்படியே தடம் மாறுகிறது. துரோகம் செய்வது யார் என்று தெரிய வரும் போது எதிர்பாராத அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த இடத்திலிருந்து கதை அந்நியப்பட்டுப் போகிறது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா இடையிலான மோதலில் ஒரு அழுத்தம் இல்லை. கொலைகள் ஒவ்வொன்றும் ரத்தம் தெறிக்க வைக்கிறது, ரத்தம் தெறிக்கும் அவ்வளவு வன்முறைக்காகவே 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால், ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கவும் முடியாது. இடைவேளைக்குப் பிறகான திரைக்கதையை இன்னும் யோசித்திருந்தால் வேறு மாதிரியான ஆக்ஷன் படமாக வந்திருக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்