Paristamil Navigation Paristamil advert login

2026 தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி?

2026 தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி?

25 ஆடி 2024 வியாழன் 01:15 | பார்வைகள் : 1126


வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவது குறித்து தி.மு.க., ஆலோசித்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிக 'சீட்' என, கூட்டணி கட்சிகள் எழுப்பும் கோரிக்கையால் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதே காரணம் என தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி அபார வெற்றி பெற்றது. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என வெளியே பேசினாலும், 30 முதல் 32 தொகுதிகள் கிடைக்கும் என்று

உறுதியாக நம்பினர். அதை மீறி கிடைத்த முழு வெற்றியை தி.மு.க., சொந்தம் கொண்டாட கூட்டணி கட்சியினர் விடவில்லை. 'வலுவான கூட்டணியால் தான் இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது' என்று பேசத் துவங்கினர்.


ஆதங்கம்


தி.மு.க.,வின் ஆட்சி அதிகாரம், ஆள் பலம், பண பலம் ஆகியவை எவ்வளவு துாரம் வெற்றிக்கு கைகொடுத்தன என்பதை தோழமை கட்சி தலைவர்கள் அங்கீகரிக்க தவறி

விட்டதாக அறிவாலயத்தில் ஆதங்கம் நிலவியது.

முதல்வரை சந்திக்க வந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அந்த உணர்வு பகிரப்பட்டது. எனினும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மாறாக, கூட்டணியின் பலமே பிரதான காரணம் என்பதை ஒவ்வொரு மேடையிலும் அழுத்தமாக கோடிட்டு காட்டினர். அதோடு நிற்கவில்லை. மெல்ல மெல்ல நகர்ந்து, '2026ல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்' என்றும், 'அமைச்சரவையில் பங்கு வேண்டும்' என்றும்

கேட்கத் துவங்கி உள்ளனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம், பகிரங்கமாக இக்கோரிக்கையை வெளியிட்டார்.

தி.மு.க., வட்டாரத்தில் இது சலசலப்பை உண்டாக்கிய நிலையில், காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாறாக, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசு, 'கார்த்தி கருத்தில் உடன்படுகிறேன். 2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்டாயம் இடம்பெற வேண்டும்' என்று கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் துவங்கி தமிழக சட்டம் - ஒழுங்கை கடுமையாக விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன், 'சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறோம்' என்று சொல்லி, காங்கிரஸ் கோரிக்கைக்கு பலம் சேர்த்துள்ளார்.

இதே கருத்தை, கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், சிறிய கட்சிகளும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற உஷாரான முழக்கத்தை நீண்டகாலமாக உச்சரித்து வரும் தி.மு.க.,வில் இது அதிருப்தியை அதிகரித்து உள்ளது.


துரதிர்ஷ்டவசமானது


'தமக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கே தி.மு.க.,வின் பலம் தான் காரணம் என்பதை தோழமை கட்சிகள் ஒப்புக் கொள்ள மறுப்பது துரதிர்ஷ்டவசமானது' என, தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டார். எத்தனை பூஜ்யங்கள் சேர்ந்தாலும், முதலாவதாக ஒரு எண் நின்றால் மட்டுமே அவற்றுக்கு மதிப்பு என்று

வகுப்பெடுத்தார் அவர்.

இந்த பின்னணியில் தான், லோக்சபா தேர்தல் முடிவுகள் அடிப்படையில், 'பூத்' வாரியாக புள்ளிவிபரங்கள் தொகுத்து தி.மு.க., தலைமைக்கு அறிக்கை அளித்திருக்கிறது ஒரு ஆய்வு நிறுவனம்.

முதல்வர் மருமகன் சபரீசனின் தங்கை நிர்வகிக்கும் நிறுவனம் அது. அதன் அறிக்கை தான், கூட்டணி குறித்து மறு ஆய்வு செய்யும் கட்டத்துக்கு தி.மு.க.,வை தள்ளியிருக்கிறது என்கிறது

அறிவாலய வட்டாரம்.

'லோக்சபா தேர்தல் முடிவுகளை பார்த்தால், 221 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி முன்னிலை பெற்றிருப்பது தெரியும்.

'தோழமை கட்சி வென்ற தொகுதியாக இருந்தாலும், அந்த ஓட்டுகளை கொண்டு வந்து சேர்க்க முழுமையாக பாடுபட்டது, தி.மு.க., தொண்டர்கள் தான். அந்த தொகுதிக்கும் தி.மு.க., தான் பணம் செலவழித்தது.

'ஆளுங்கட்சியினர் தான் இறுதி வரை உழைத்தனர். இதை யாராலும் மறுக்க முடியுமா?' என கேட்டார் ஒரு தி.மு.க., பிரமுகர்.

கூட்டணி வேண்டாம் என இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. சூழ்நிலை மாறுமானால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையுடன் முதல்வர் காய் நகர்த்துகிறார் என்றார் அவர்.


எட்டாமல் இல்லை


முதற்கட்டமாக, ஐந்து தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அடுத்த இரு நாட்களில் குழு உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் உதயநிதியின் வீட்டில், 234 தொகுதி பொறுப்பாளர்களுக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

அதில் பேசிய அமைச்சர், 'ஒருவேளை தனித்து போட்டியிடும் சூழல் வந்தாலும் நாமெல்லாம் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தி.மு.க.,வின் தயார் நிலை குறித்த தகவல்கள் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாமல் இல்லை. என்றாலும், அக்கட்சிகளின் தலைவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

'சட்டசபை தேர்தலுக்கு நீண்ட அவகாசம் இருக்கிறது. அதற்குள் தேசிய அளவில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது' என்று ஒரு கட்சியின் முக்கிய தலைவர் குறிப்பிட்டார். 

தேர்தல் பணி: தி.மு.க., துவக்கம்

வரும் 2026 சட்டசபை தேர்தலில், மகளிருக்கு அதிக தொகுதிகள் தரப்பட வேண்டும் என, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவிடம் மகளிர் அணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தல் பணிகளை திட்டமிட, தி.மு.க.,வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. கட்சியின் துணை அமைப்புகளாக கருதப்படும் 22 அணிகளின் நிர்வாகிகளிடம், அக்குழுவினர் வரிசையாக ஆலோசனை நடத்த உள்ளனர். முதல் கூட்டமாக, மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று துவங்கியது. மாணவர் அணி மாநில தலைவர் ராஜிவ் காந்தி, மாநில செயலர் எழிலரசன், மகளிர் அணி மாநில தலைவி விஜயா தாயன்பன், மாநில செயலர் ெஹலன் டேவிட்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 'சட்டசபை தேர்தலில், கடந்த முறை ஒதுக்கிய எண்ணிக்கையைக் காட்டிலும், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். கிளை செயலர் நிர்வாகிகள் வரை, மகளிரை நியமிக்க வேண்டும்' என, மகளிர் அணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், 'கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து, திராவிட மாணவர் மன்றங்கள் வாயிலாக, பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். மாணவர் சட்டசபை என்ற அமைப்பை பள்ளிகளில் உருவாக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்