Paristamil Navigation Paristamil advert login

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு கிளம்பியது எதிர்ப்பு

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு கிளம்பியது எதிர்ப்பு

25 ஆடி 2024 வியாழன் 01:11 | பார்வைகள் : 1188


உள்நாட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதற்கு, வங்கதேச அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்று உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடந்த 16ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இது வன்முறையாக மாறியதை அடுத்து வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்கள் இட ஒதுக்கீட்டில் படித்து வரும் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

மாணவர்கள் - போலீசார் மோதல் உட்பட பல்வேறு இடங்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களில், 197 பேர் பலியாகினர். இதையடுத்து, நாடு முழுதும் இரண்டு மணி நேர தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், வங்கதேச கலவரம் குறித்து சமீபத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வங்கதேசத்தில் நடப்பது உள்நாட்டு பிரச்னை. அங்கு ஆதரவின்றி சிரமப்படும் மக்கள் எவரானாலும், மேற்கு வங்க கதவுகளை தட்டும் போது, அவர்களுக்கு நாங்கள் நிச்சயம் அடைக்கலம் அளிப்போம்.

'அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்' என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.

அதில், 'நாங்கள் மிகவும் நெருக்கமான உறவை பேணும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எங்கள் உள்நாட்டு பிரச்னை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

'அவரின் இந்த கருத்து மிகவும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்