செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
24 ஆடி 2024 புதன் 12:40 | பார்வைகள் : 963
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட, பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 25) ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?. நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை. பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே?. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ‛‛பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுவதை ஏற்க முடியாது'' என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
கண்டிப்பு
இன்று பதில் இல்லையென்றால் நாளை(ஜூலை 25) பதிலோடு வாருங்கள் என அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 25) ஒத்திவைக்கப்பட்டது.