Paristamil Navigation Paristamil advert login

பரந்துார் விமான நிலையம்: மத்திய அரசு அனுமதி

பரந்துார் விமான நிலையம்: மத்திய அரசு அனுமதி

24 ஆடி 2024 புதன் 05:16 | பார்வைகள் : 3907


பரந்துார் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக, பரந்துார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கி, 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசுக்கு சொந்தமான, 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு, டிட்கோ கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, பரந்துார் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
இது தொடர்பாக, எழுத்து வாயிலாக அவர் அளித்த பதிலில், 'பசுமைவெளி விமான நிலைய கொள்கை - 2008ன்- படி, பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, தமிழக அரசின் டிட்கோ சார்பில் மனு அளிக்கப்பட்டது.

'விரிவான ஆலோசனைகளுக்கு பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு, கடந்த ஜூலை ௯ல், பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்தது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்