Paristamil Navigation Paristamil advert login

’இரண்டாவது திட்டம் என்று எதுவும் இல்லை!” - ஜனாதிபதி நேர்காணல் : (பகுதி 01 - Jeux olympiques)

’இரண்டாவது திட்டம் என்று எதுவும் இல்லை!” - ஜனாதிபதி நேர்காணல் : (பகுதி 01 -  Jeux olympiques)

24 ஆடி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 2508


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜூலை 23, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார். அரசியல் குழப்பங்கள் ஒரு புறமும், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் ஒருபுறமும் என பரபரப்பான சூழ்நிலை இருக்க, மக்ரோனின் இந்த நேர்காணல் மிக அவசியமான ஒன்றாக அமைந்திருந்தது. 

 

இஸ்ரேல் வீரர்கள் பங்கேற்பு

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வீரர்கள் பங்கேற்க உள்ளதை ஜனாதிபதி மக்ரோன் உறுதிப்படுத்தினார். இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, இஸ்ரேல் போர் விதிகளை மீறி செயற்படுவதாகவும், அந்நாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுக்க, ஜனாதிபதி அதனை மறுத்து, “அவர்கள் தங்களது அடையாளங்களின் கீழ் விளையாட முடியும்” என தெரிவித்தார்.

 

கனேடிய பாடகி Celine Dion வருகை!

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் சிறப்பு விருந்தினராக கனேடிய பாடகி Celine Dion கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறதாக மக்ரோன் தெரிவித்தார். ’எங்களது அனைத்து சிறப்பு விருந்தினர்கள் போல் Celine Dion இன் வருகையும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. ஆரம்பநாள் நிகழ்வில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!” என தெரிவித்தார். 

பாடகி, Celine Dion, உலகம் முழுவதும் அறியப்பட்ட டைட்டானிக் திரைப்படத்தின் ’My Heart will go on' பாடல் உள்ளிட்ட ஏராளமான பிரபல பாடல்களை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

முதல் ஐந்து இடங்களுக்குள் பிரான்ஸ்!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்காக முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் தயாராகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக எங்களது வீரர்களை தயார்படுத்தி வருகிறோம். நாங்கள் அதிக பதக்கங்களை பெறும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

இரண்டாவது திட்டம் இல்லை!

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வு திட்டமிட்டபடி சென் நதியில் இடம்பெறும். திட்டமிடலில் எந்த குழப்பமும் இல்லை. இரண்டாவது திட்டம் என்று எதுவும் இல்லை. (Pas de plan B) என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

உச்சக்கட்ட பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு நான் நன்றியை செலுத்த விரும்புகிறேன்" என மக்ரோன் மேலும் குறிப்பிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்