கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு மசோதா : போன் பே நிறுவனர் கடும் விமர்சனம்
19 ஆடி 2024 வெள்ளி 03:06 | பார்வைகள் : 959
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த என் பிள்ளைகள் இங்கு வேலை பெற தகுதியற்றவர்கள் என்பது வெட்கக்கேடு' என, மாநில அரசின் இட ஒதுக்கீடு மசோதாவை, 'போன் பே' துணை நிறுவனர் விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களின் நிர்வாக பதவிகளில் 50 சதவீதமும், பிற பணிகளில் 75 சதவீதமும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய மாநில அரசு முடிவு செய்தது.
தொழில் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மசோதா தாக்கல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு குறித்து, 'போன் பே' நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சமீர் நிகாம் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
எனக்கு 46 வயதாகிறது. என் வாழ்நாளில், 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாநிலத்தில் நான் வசித்தது இல்லை. காரணம், என் தந்தை கடற்படையில் பணியாற்றினார்.
அதனால், நாடு முழுதும் அவருக்கு பணியிட மாற்றம் வரும்; பல ஊர்களில் வசித்துள்ளேன்.
கர்நாடக அரசு அறிவித்த இட ஒதுக்கீடு மசோதா, என்னை போன்ற ஆட்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது. என் நிறுவனத்தின் வாயிலாக நாடு முழுதும் 25,000 வேலை வாய்ப்புகளை அளித்துள்ளேன்.
என் பிள்ளைகள் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள். இருந்தும், அவர்கள் இந்த மண்ணில் வேலை பெற தகுதியற்றவர்கள் என்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.