வேகமாக பரவும் சந்திபுரா வைரஸ் : குஜராத்தில் குழந்தை பலி
18 ஆடி 2024 வியாழன் 03:03 | பார்வைகள் : 671
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு குஜராத்தில் முதல் பலியாக 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் புதிதாகப் பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகி மக்களைத் தாக்கி வருகின்றன. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் மொட்டா கந்தாரியா என்ற கிராமத்தில் குழந்தைகளைக் குறிவைத்து 'சந்திபுரா' வைரஸ் தாக்கத் தொடங்கியுள்ளது . நேற்று சந்திபுரா தொற்றுக்கு முதல் பலியாக 4 வயது குழந்தை பலியாகியுள்ளது.
இதை புனேவில் உள்ள என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைரலாஜி மையம் உறுதி செய்துள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்தார்.
ஏற்கனவே 5 முதல்14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் 'சந்திபுரா' வைரஸால் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.