'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து, மரணம்…!
17 ஆடி 2024 புதன் 13:02 | பார்வைகள் : 459
கார்த்தி நடித்து வரும் ’சர்தார் 2’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போது படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுவது திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சர்தார் 2’படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் 20 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் ஏழுமலைக்கு மார்பு பகுதியில் காயமடைந்ததாகவும் அதுமட்டுமின்றி நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.