Paristamil Navigation Paristamil advert login

நண்டு மசாலா...

நண்டு மசாலா...

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10958


 விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள்.

இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
அரைப்பதற்கு...
 
துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 4-5
 
செய்முறை:
 
முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, இலி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
 
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.
 
அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.
 
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்