இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாம்பே ஜெயஸ்ரீ மகன்..
15 ஐப்பசி 2024 செவ்வாய் 14:48 | பார்வைகள் : 1063
பிரபல பாடகியின் மகன் தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1980 ஆம் ஆண்டில் முதல் பாடத் தொடங்கிய இவர், சமீபத்தில் வெளியான ’வீட்டுல விசேஷம்’, ’கண்ணகி’ உள்ளிட்ட படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்ராஜ், மலையாளத்தில் ஏற்கனவே சில படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், தற்போது சித்தார்த் நடிக்க இருக்கும் தமிழ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், முக்கிய வேடங்களில் சரத்குமார், தேவயானி, மீரா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
’எட்டு தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.