இலங்கையில் ஓடும் ரயிலில் செல்பி - இருவர் படுகாயம்
13 கார்த்திகை 2024 புதன் 09:06 | பார்வைகள் : 768
ஓடும் ரயிலில் இருந்து செல்பி எடுக்க முயன்ற கொரிய சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திங்கட்கிழமை இரவு பதுளை நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் வாயில் படியில் தொங்கியவாறு நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போது புகையிரத எல்லையில் உள்ள இரும்பு கம்பத்தில் மோதியுள்ளார்.
காயமடைந்த சுற்றுலா பயணி தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் ஷோலி டோங் பே என்ற , 61 வயதான கொரிய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொரிய சுற்றுலா பயணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் பதுளைக்கு இரவு நேர தபால் ரயிலில் எல்ல நோக்கி பயணிக்கையில், ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் செல்பி எடுத்துக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட போது, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து இறங்கி, மேடையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு மீளப் புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்து, கீழ் காலில் பலத்த காயம் அடைந்தார்.
குறித்த பெண் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பல சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும், இது குறித்து ரயில்வே அதிகாரிகளின் கவனம் தேவை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேபால ரத்நாயக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.