அனிருத் போட்ட பதிவால் சர்ச்சை...!
9 கார்த்திகை 2024 சனி 07:29 | பார்வைகள் : 770
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருந்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக அமரன் உருவாகி இருந்தது.
மேஜர் முகுந்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டி இருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் அவரது கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட சிவகார்த்திகேயன் வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எஸ்.கே. அமரன் படம் பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து சிலாகித்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நாளே அமரன் படத்தை பார்த்துவிட்டு, அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் தன்னை கலங்க வைத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார், நடிகர் சிம்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் படத்தை பாராட்டி தள்ளினர். இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தும் அமரன் படம் பார்த்த பின்னர் அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், அமரன் பெஸ்ட் சினிமா, என்னுடைய சிவகார்த்திகேயனை நினைத்து பெருமைப்படுகிறேன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் அவரது குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோருக்கு சல்யூட் என பதிவிட்டு இருந்தார். அமரன் படத்தை பாராட்டி அவர் இந்த பதிவை போட்டிருந்தாலும் அதுவே அவருக்கு வினையாக மாறி இருக்கிறது.
அமரன் படத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே அப்படத்தின் இசை தான். அதற்காக ஜிவி பிரகாஷை ஒரு இடத்தில் கூட வாழ்த்தாமல் அனிருத் போட்டுள்ள இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள். ஒரு இசையமைப்பாளராக இருந்துகொண்டு சக இசையமைப்பாளரை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா என கேள்வி எழுப்பி வருவதோடு, ஜிவி பிரகாஷ் மீது அப்படி என்ன வன்மம் அனிருத்துக்கு என பலரும் சாடி வருகின்றனர்.