ரணிலுக்கு எதிராக வழக்கு தாக்கல்
8 கார்த்திகை 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 870
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்ட நடைமுறையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த மனுவை, எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மொஹமட் லாபிர் தாஹிர் மற்றும் பி.குமரன் ரத்னம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கிலேயே,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
விசாரணையின்போது, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட்களை வாங்குவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்களவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாதிட்டனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரயா, கடவுச்சீட்டு கொள்வனவு நடவடிக்கைகள் முறையற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக சாட்சியங்களை முன்வைத்தார்.
வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், இடைக்கால தடையை நீக்குவதற்கான கோரிக்கைக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. இது தொடர்பான விசாரணை டிசம்பர் (09) ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .
750,000 சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட்டுகளையும் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு, எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.