அது சத்தியமான உண்மை; மன்னிப்பு கேட்டாலும் மாறாது: சீமான்!
13 புரட்டாசி 2024 வெள்ளி 22:33 | பார்வைகள் : 1040
ஹோட்டல் உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை, மன்னிப்பு கேட்டாலும் அது மாறாது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
கண்டனம்
கோவையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வின் தாக்கம் டில்லி வரையும் எதிர்க்கட்சிகள் அறிக்கை விடும் அளவுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரபல ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு கண்டன அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றன.
விவகாரம்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள அண்ணாமலை மன்னிப்பு கோரி விட்டாலும் இன்னமும் விவகாரம் ஓயவில்லை. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., என அனைத்துக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் விமர்சித்து வருகின்றனர்.
உண்மை மாறாது
இந் நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது என்று கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
முதலீடு
மதுவுக்கு எதிராக நீண்ட காலம் போராடி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டும். தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை தந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகிறார். இதை நம்புகிறீர்களா?
அதிகாரம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பேசின உண்மை மாறாது. அவரின் கேள்வி நாடு முழுவதும் பரவி விட்டது. ஆனால் அதிகாரம் அதை பணிய வைக்கிறது.
உண்மை
அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவித்தாலும் அந்த கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
இவ்வாறு சீமான் கூறினார்.